டிரெய்லரின் துவக்கத்திலேயே, ஆய்வுகள், அதற்காக ஒரு புத்தகம், அதைச் சார்ந்த கேரக்டர்கள் என ஹாலிவுட் படங்களில் மட்டுமே அதிகம் இதுபோல் காண முடியும். எப்போதும் போல் ஏதோ ஒரு குரூப் ஒரு வீடு, அல்லது ஏதேனும் ஒரு பங்களா அதில் சிக்கும் இளைஞர்கள் என்றில்லாமல் கொஞ்சம் மெனெக்கெட்டு சில ஆராய்ச்சிகளுக்கு பிறகு மாயா படத்தை துவக்கி உள்ளது தெரிகிறது.
முக்கியமாக மாயவனம் காடு, அங்கிருக்கும் பழுதடைந்த மனநல மருத்துவமனை காட்சிகள் பின் அதை சார்ந்த புத்தகம் என டிரெய்லரின் துவக்கமே பார்வையாளர்களை சற்றே கவர்கிறது. அடுத்தகட்டமாக பேய் படங்கள் ஹாலிவுட்டில் அதிகம் வெற்றி பெறுவதற்கு ஒரே காரணம் தனியான பெண்ணுக்கு நடக்கும் பய வேட்டை, முக்கியமாக அவளது குழந்தை அதைச் சார்ந்த படம் என நிறைய படங்கள் இந்த லிஸ்டில் அடக்கம்.
இதை ஆங்கில பட உலகில் ‘தி மம்மி ட்ராப்’ எனக் கூறுவது வழக்கம். இதற்கு சான்றாக தி டார்க் வாட்டர், கேரி, தி எக்ஸார்சிஸ்ட், இவையாவும் தனியாக குழந்தையுடன் வசிக்கும் தாய்க்கும் மகளுக்கும் ஏற்படும் அமானுஷ்யங்களின் பயமுறுத்தலும் , அது சார்ந்த போராட்டமும் தான் கதைக்களமாக இருக்கும், இதை பேய் மட்டுமின்றி தி ஃப்லைட் ப்ளான், தி கராத்தே கிட், இ.டி, டெர்மினேட்டர் 2: தி ஜட்ஜ்மெண்ட் டே, என இந்த படங்கள் கூட தனியான தாயின் வருத்தங்களையும், போராட்டங்களையும் முக்கியத்துவம் செய்திருக்கும் படங்கள்தான்.எனவே தான் இந்த பாத்திரங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து விடுகின்றன.
அப்படி வெளியாகி வெற்றிபெற்ற படங்கள் நம் தமிழிலேயே உள்ளன, ரிதம் மீனா, இங்லீஷ் விங்லீஷ் ஸ்ரீதேவி, 36 வயதினிலே, வேட்டையாடு விளையாடு ஜோதிகா, என்னை அறிந்தால் த்ரிஷா என சொல்லிக் கொண்டே போகலாம், எப்போதும் இதுபோன்ற கேரக்டர்கள் மக்களிடம் அதிகம் பேசப்பட்டு விடும்.
சரி இப்போது நயனின் பாத்திரத்திற்கு வருவோம். நயன்தாராவின் இந்த மாயா மேத்யூஸ் பாத்திரமும் ஹாலிவுட் பாணியில் தனியாக குழந்தையுடன் கைவிடப்பட்ட தாய் அமானுஷ்யங்களுக்கு நடுவில் மாட்டிக் கொள்ளும் அதே பாத்திரம். இப்படிபட்ட பாத்திரங்களுத்தான் உதவிகள் தேவைப்படும். செய்வதறியாமல் தவிக்கும் தருவாயை அழகாக உருவாக்க முடியும்.
ஹீரோ எனில் ஒரு நாலு ஃபைட், சேஸிங் என முடித்துவிடலாம், அழகிய ஹீரோயின் என்றாலும் ஒரு லவ், அந்த பாத்திரத்திற்காக வரும் ஹீரோ என வேறு பாணியில் சென்றுவிடும். ஆனால் இங்கு கதையே வேறு. குழந்தைக்கு ஒன்றும் தெரியாது, யாரையேனும் உதவிக்கும் அழைக்கலாம் என்றால் யார் எந்த நேரத்தில் என்ன பிரச்னை செய்வார்கள் என்ற பயம், மேலும் ஏற்கனவே கணவனால் ஏற்பட்ட பாதிப்பால் ஆண் என்றாலே வெறுப்பு இதற்கு நடுவில் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் கண்களில் கண்ணீர் தேங்க பார்வையாளர்களை இழுக்கும் சக்திவாய்ந்த கேரக்டர்தாம் இந்த தனித்துவிடப்பட்ட தாய் பாத்திரம்.
மேலும் அம்மாவாக, திருமணம் ஆன பெண்ணாக என நயன்தாரா ஏற்கனவே சில படங்களில் நடித்து விட்டாலும் இது வேறு. இப்போதுதான் நம்பர் ஒன் நடிகையாக சரியான பாதையை நயன்தாரா தேர்வு செய்துள்ளார் என்றே கூறலாம். ’தி மம்மி ட்ராப்’ நயன்தாராவிற்கு எப்படி உதவப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
- ஷாலினி நியூட்டன் -
மாயா டிரெய்லரைக் காண :
0 comments:
Post a Comment